சுற்றுலா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஆக்லேண்டில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை நியூசிலாந்து அணிக்கு வழங்கியது.
இந்திய அணியின் பணிப்பின் படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ரொஸ் டெய்லர் கொலின் மன்ரோ மற்றும் கேன் வில்லியம்ஸன் ஆகியோரது அரைச் சதங்களின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக கொலின் மன்ரோ 42 பந்துகளுக்கு 59 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ரொஸ் டெய்லர் 27 பந்துகளுக்கு 54 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 26 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இதில், மார்டின் கப்டில் தனது பங்கிற்கு 19 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஜஸ்ப்ரிட் பும்ரா, யுஸ்வேந்திர சஹால், சர்துல் தாகூர், சிவம் டுபே மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
நியூசிலாந்து அணி நிர்ணயித்த 204 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணி கே.எல். ராஹுல், விராட் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்களின் உதவியுடன் 19 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
இந்திய அணி சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளுக்கு 58 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், கே.எல். ராஹுல் 27 பந்துகளுக்கு 56 ஓட்டங்களையும், விராட் கோஹ்லி 32 பந்துகளுக்கு 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில், இஸ் சோதி 2 விக்கெட்டுகளையும், ப்ளையர் டிக்னர் மற்றும் மிச்சல் சென்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளதுடன், நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது T20I போட்டி எதிர்வரும் 26ம் திகதி ஹெமில்டனில் நடைபெறவுள்ளது.
0 Comments
No Comments Here ..