அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு பிரதமர் மோடி வழங்கிய சந்தனப்பெட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எள் இடம்பெற்றுள்ளது. அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிடன் மற்றும் அவரது ஜில் பிடன் வழங்கிய தனிப்பட்ட விருந்தில்க லந்து கொண்டார்.
அப்போது அமெரிக்க அதிபர் ஜோபிடனுக்கு ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை பரிசாக வழங்கினார். மைசூரில் இருந்து பெறப்படும் சந்தன மரம் கொண்டு இந்த சந்தன பெட்டி நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்தன பெட்டியில் பத்து நன்கொடைகள் உள்ளன. 80 வயதை கடந்தவர்களுக்கு வழங்கப்படும் தானத்தை குறிக்கும் வகையில் 10 வகை பொருட்கள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க அதிபர் பிடன் 80 வயதை கடந்தவர் என்பதால் அவருக்கு இந்திய முறைப்படி 10 வகை தானங்கள் பரிசளிக்கப்பட்டது.கொல்கத்தாவை சேர்ந்த கைவினை கலைஞர் வடிவமைத்த விநாயகரின் வெள்ளி சிலை, வெள்ளி விளக்கு, உத்தரப் பிரதேசத்தில் வடிவமைக்கப்பட்ட ஸ்லோகம் பதித்த செப்புத் தகடு ஆகியவை பெட்டியில் இருந்தது.
பசு தானத்தை குறிக்கும் வகையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வடிவமைத்த வெள்ளி தேங்காயும் நிலம் தானத்தை குறிக்கும் வகையில் மைசூர் சந்தனக்கட்டை ஒன்றும் பெட்டியில் கொடுக்கப்பட்டது. பஞ்சாபில் இருந்து கொண்டு செல்லப்பட்ட நெய், ஜார்கண்டில் கையால் நெய்யப்பட்ட பட்டுத்துணி, உத்தராகண்டில் பயிரிடப்பட்ட நெல் அரிசி வகைகள், மராட்டியத்தில் வெல்லம், குஜராத் உப்பு ஆகியவையும் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் உபநிஷத் ஆங்கில மொழியாக்க புத்தகத்தை ஜோபிடனுக்கு மோடி வழங்கினார்.யீட்ஸ் எழுதிய உபநிஷத்தின் 10 கோட்பாடுகள் என்ற புத்தகத்தின் முதல் பதிப்பை பரிசாக அளித்தார்.
மேலும் அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பிடனுக்கு 7.5 காரட் எடை கொண்ட பச்சை வைரக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். இந்த வைரம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 7.5 காரட் வைரமாகும்.
இந்த வைரக்கல்லானது சூரிய சக்தி மற்றும் காற்றாலையால் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடிக்கு 20-ம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட புத்தகத்தையும், பழமைவாய்ந்த அமெரிக்க புகைப்படக் கருவியையும் ஜோ பிடன் பரிசாக வழங்கினார்.
0 Comments
No Comments Here ..