09,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

நியூஸிலாந்துக்கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி

காலி சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து குவித்த ஆட்டம் இழக்காத சதத்தின் உதவியுடன் 9 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும். 

அத்துடன் அப்போட்டியில் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சமரி அத்தபத்துவும் விஷ்மி குணரட்னவும் ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த 159 ஓட்டங்கள் அனைத்து விக்கெட்களுக்குமான இலங்கை சாதனையாகவும் பதிவானது.


மேலும், மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 5ஆம் இடத்திலுள்ள நியூஸிலாந்தை வெற்றிகொண்டதன் மூலம் 10ஆம் இடத்திலுள்ள இலங்கைக்கு ஐ.சி.சி. மகளிர் சம்பின்ஷிப்பில் பெரும் முன்னேற்றம் அடைய முடியும் என்ற நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.


செவ்வாய்க்கிழமை காலை பெய்த மழை காரணமாக இப்போட்டி, அணிக்கு 28 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது.

அப்போட்டியில் சுழல்பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுளும் சமரி அத்தபத்துவின் அதிரடி சதமும் இளம் வீராங்கனை விஷ்மி குணரட்னவின் திறமையான துடுப்பாட்டமும் இலங்கைக்கு வெற்றியை ஈட்டிக்கொடுத்தன.


நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 171 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 27 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய சமரி அத்தபத்து 83 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 108 ஓட்டங்களைக் குவித்தார். 93ஆவது மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய சமரி அத்தபத்து பெற்ற 7ஆவது சதம் இதுவாகும்.


அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய 17 வயதுடைய விஷ்மி குணரட்ன தனது 5ஆவது போட்டியில் முதலாவது அரைச் சதத்தைப் பெற்றார்.

மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய விஷ்மி 74 பந்துகளில் 3 பவுண்டறிகளுடன் 50 ஓட்டங்களைப் பெற்றார்.

ஹஷித்தா சமரவிக்ரம 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.


முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த நியூஸிலாந்து 28 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சுசி பேட்ஸ் 28 ஓட்டங்களை மாத்திரம் பெற்று காவிஷா டில்ஹாரியினால் ஆட்டம் இழக்கச்செய்யப்பட்டார்.

அமேலியா கேர் 40 ஓட்டங்களைப் பெற்று இனோக்கா ரணவீரவின் பந்துவீச்சில் களம் விட்டு வெளியேறினார். சொபி டிவைன் (18), மெடி க்றீன் (38) ஆகிய இருவரையும் இனோக்கா ரணவீர ரன் அவுட் ஆக்கியது விசேட அம்சமாகும்.

ஜோர்ஜியா ப்ளிம்மர் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.


பந்துவீச்சில் காவிஷா டில்ஹாரி 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், சுகந்திகா குமாரி 28 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், இனோக்கா ரணவீர 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.





நியூஸிலாந்துக்கு எதிராக அனைத்து வகையான மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை ஈட்டிய முதலாவது வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு