06,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் பிரம்மாண்ட முயற்சியில் தமிழர்களின் பங்கு

இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் பிரம்மாண்ட முயற்சியான சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நிலவு ஆராய்ச்சியின் இஸ்ரோவின் கனவுத் திட்டங்களான சந்திரயான் விண்கலங்களை உருவாக்குவதில் தமிழர்களின் பங்கு அளப்பெரியதாக அமைந்துள்ளது.

இந்திய விண்வெளிப் பயணத்தின் உச்சமாக கருதப்பட்ட சந்திரயான் 1 விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட தொலைதூரத்தில் இருக்கும் நிலவை விண்கலத்தின் வாயிலாக அங்குலம் அங்குலமாக ஆய்வுக்குட்படுத்தும் அறிவியல் திறனை இந்தியா பெற்றிருந்தனை உலகே உணரும் நாளாக சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்ட நாள் அமைந்தது.


இத்தகையை பெருமையை இந்தியா படைக்க காரணமாக இருந்தவர்களில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை. நிலவு மனிதன் என்று அழைக்கப்படும் மயில்சாமி அண்ணாதுரையின் திட்டத்தினால் வடிவமைக்கப்பட்ட சந்திரயான் ஒன்று விண்கலம் தான் நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து சாதனை படைத்தது.


அடுத்ததாக நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ மூலமாக சந்திரயான் 2 விண்கலம் கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. திட்டமிட்டபடி 95 சதவிகிதம் சென்ற சந்திரயான் 2 இறுதி நேரத்தில் தரையிறங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தோல்வியடைந்தது.

உலகமே வியந்து பார்த்த சந்திரயான் 2 திட்டத்தை தயாரித்த இரண்டு பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வனிதா முத்தையா ஆவார். 2006 ஆம் ஆண்டு சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற வனிதா முத்தையா இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குனர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார். தரவுகளை கையாளுவதிலும் சிக்கல்களை கண்டறிந்து சீரமைப்பதிலும் வனிதா முத்தையா நிபுணத்துவம் பெற்றவராக திகழ்ந்துள்ளார்.


சந்திரயான் 2 திட்ட இயக்குனராக பணியாற்றி வனிதா முத்தையா வேறு துறைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான் 3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டின் விழுப்புரத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார். வீரமுத்துவேல் தலைமையிலான குழு கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு வகையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு சந்திரயான் 3 விண்கலத்தை தயாரித்தது. குறிப்பாக சந்திரயான் 2 திட்டத்தில் ஏற்பட்ட கோளாறுகளை கண்டறிந்து அதனை மேம்படுத்தி சந்திரயான் 3 விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

மெய்நிகர் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் குறித்தான ஆய்வில் ஆர்வம் கொண்ட வீரமுத்துவேலின் முழு ஈடுபாட்டில் சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலவு கனவுத் திட்டங்களை நிறைவேற்றியதில் தமிழர்களின் பங்கு அளப்பரியது 




இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் பிரம்மாண்ட முயற்சியில் தமிழர்களின் பங்கு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு