29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை

இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே 2 நாள் பயணமாக டெல்லி வர உள்ளதை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதம் முழுக்க முழுக்க, கடந்த கால காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை எல்லாம் வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலமாகவே இருக்கிறது. காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியின் தவறுகளை சரி செய்ய, பிரதமர் மோடியால் மட்டும்தான் முடியும் என்று வெளிப்படையாக ஒப்புக்கொண்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


இலங்கையில் தமிழ் சகோதர, சகோதரிகள் கொத்துக்கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, இங்கே காங்கிரஸ் கூட்டணியில் பசையான மத்திய மந்திரி பதவியை வாங்க டெல்லிக்கு பறந்தவர்கள், ஏதோ கடிதங்கள் எழுதியே பிரச்சினைகளை தீர்த்து விட்டதை போல இன்று பெருமையடித்துக் கொண்டிருப்பது நகைக்கத்தக்கது.


தி.மு.க. ஆட்சியில், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டபோது, பா.ஜ.க. தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி அதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் அன்று ஆட்சியில் இருந்த தி.மு.க. அந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை கூட நீதிமன்றத்தில் வழங்காமல், கச்சத்தீவு, நம் கைவிட்டுச் செல்லக் காரணமாக இருந்தது. தி.மு.க. அதன் பின்னர் பல முறை, பல கட்சிகளுடன் சந்தர்ப்பவாத கூட்டணியில் இருந்து, மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், கச்சத்தீவை மீட்க உறுதியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


கச்சத்தீவைத் தாரை வார்த்த தி.மு.க. கும்பலுக்கு, கச்சத்தீவு பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தினர் மத்திய மந்திரி பதவி வாங்க, தமிழர்களின் நலனை நீங்கள் அடகு வைத்த அதே காலத்தில், அன்றைய குஜராத் முதல்-மந்திரியாக இருந்த பிரதமர் மோடி, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசை வலியுறுத்தியவர்.


உங்களை விட, தமிழ் மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வு மேம்பட பிரதமர் மோடி செய்துள்ள நலப்பணிகள் ஏராளம். இலங்கையில் தமிழர்களுக்கு உரிமை வழங்கும் 13-ம் சட்டத்திருத்தம் கொண்டு வர பிரதமர் மோடி 2 முறை வலியுறுத்தி இருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கடந்த ஜனவரி மாதம் இலங்கைப் பயணத்தின் போதும் 13-ம் சட்டத் திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி இருக்கிறார்.


விரைவில் அது அமலுக்கு வரும் என்றும் உறுதி தெரிவித்திருக்கிறார். தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மீனவர்கள் உயிர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை நிலவியது. மத்தியில், தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில், தமிழகத்தைச் சேர்ந்த 85 மீனவர்கள் கொல்லப்பட்டனர்.


ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான 9 ஆண்டு கால ஆட்சியில், மு.க.ஸ்டாலினால் அப்படி ஒரு நிகழ்வைக் குறிப்பிட முடிந்ததா? காங்கிரசுடன் மத்திய கூட்டணி ஆட்சியில் இருந்தபோது வாளாவிருந்துவிட்டு, தற்போது பிரதமர் மோடி, தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி உருவாக்கிய ஒவ்வொரு பிரச்சினைக்கும் தீர்வு கொண்டு வரும்போது, வழக்கம் போல தங்கள் 'ஸ்டிக்கரை' ஒட்ட முயற்சிக்கிறது தி.மு.க. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு