நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படையினரும் உற்சாகமாக கொண்டாடினார்கள்.
இதையொட்டி கடல், கடற்கரை, கப்பல்களில் தேசியக்கொடி ஏற்றினார்கள். மூழ்கு நீச்சலில் (ஸ்கூபா டைவிங்) நிபுணத்துவம் பெற்ற கடலோர காவல் படை வீரர்கள் 4 பேர் இணைந்து, தேசியக்கொடியுடன் கடலுக்குள் நீந்திச்சென்றனர். 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர்.
தொடர்ந்து, தேசியக் கொடியானது கடலுக்கு மேல்பரப்பில் பறந்தது. அப்போது கடலுக்குள் இருந்தபடியே கடலோர காவல் படை வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களில் நின்றபடி, அனைத்து வீரர்களும் தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி, சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் இந்திய கடல் எல்லையில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் கடலோர காவல் படை வீரர்கள் இந்தியாவின் வரைபடம் போல் அணிவகுத்து நின்று, தேசிய கொடியை உயர்த்தி மரியாதை செலுத்தினர். பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள்.
0 Comments
No Comments Here ..