புதுடெல்லியில் உள்ள ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைகளுக்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றது.
இதில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டு சிஏஏ, என்.ஆர்.சி.க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போராட்ட கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த மாணவர்கள், பொதுமக்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
மர்ம நபர் நடத்திய இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு மாணவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஜாமியா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து ஜாமியா பகுதியில் நேற்று மாலை மாணவர்களும், பொதுமக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஜாமியா பல்கலைக்கழக துப்பாக்கிச்சூடு தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ''ஜாமியாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு பணம் கொடுத்தது யார்?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''நான் வன்முறையை நம்புவதும் இல்லை. உங்களுக்கு வன்முறையை கற்றுக் கொடுக்கவில்லை. நான் உங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஒன்றே ஒன்றுதான், உங்கள் உயிரே போகும் நிலைவந்தாலும் நீங்கள் யார் முன்னும் தலைகுனிந்து நிற்கவேண்டாம்’’ என்ற மகாத்மா காந்தியில் சொற்களை அவர் பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ராகுல் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில், ''சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த லட்சக்கணக்கான மக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் அவர்களுக்கும் எனது அனுதாபத்தை கூறிக்கொள்கிறேன். இந்த பயங்கர சோதனையில் இருந்து மீண்டுவர மக்களுக்கு தைரியமும் வலிமையும் பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது’’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..