12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியர்களை மீட்க சீனா விரைந்தது போயிங்-747 ரக சிறப்பு விமானம்

கொரோனா வைரசினால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவிய இந்த வைரசினால் அந்நாட்டில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியா இந்தோனேசியா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்பட 18 நாடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் சீனாவில் உள்ள தங்களது குடிமக்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சுமார் 600 இந்தியர்கள் வுகான் நகரில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததும் இவர்கள் தங்களது விடுதிகள் மற்றும் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்த மாணவர்கள் தங்களை மீட்க வேண்டும் என்று சமூக வலைதளங்கள் மூலம் கோரிக்கை விடுத்தனர். அவர்களது பெற்றோர்களும் மத்திய-மாநில அரசுகளை அணுகினார்கள்.

முதலில் வுகான் நகரில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது என்று சீன அரசு திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது. இதனால் அந்த நகரில் சுமார் 500 இந்தியர்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து சீன அதிகாரிகளுடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். முக கவசம், உணவு உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு உருவாகி இருப்பதால் இந்தியர்களை அழைத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து சீன அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கி உள்ளது. இந்தியர்களை மீட்க ஏற்கனவே போயிங் 747 ரக விமானத்தை மத்திய அரசு மும்பையில் தயாராக நிறுத்தி இருந்தது. இதையடுத்து இன்று அந்த விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு டெல்லி சென்றது.இந்நிலையில், சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக சிறப்பு விமானம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. 

‘வுகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 325 இந்தியர்களை வெளியேற்ற சீனாவில் உள்ள இந்திய தூதர் ஏற்பாடு செய்துள்ளார். அந்த 325 பேரையும் விமானத்தில் அழைத்து வர உள்ளனர். அவர்களுக்கு விமானத்தில் ஏறும் முன்பு தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படும். விமானத்தில் 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்பட மருத்துவக் குழுவும் செல்கிறது. அவர்களும் வுகானில் இருந்து திரும்பும் இந்தியர்களை தீவிரமாக கண்காணிப்பார்கள்.

இந்த விமானம் நாளை அதிகாலை 2 மணிக்கு இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் அனைவரும் டெல்லி மனேசர் பகுதியில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவர். கையுறை, உடலை மறைக்கும் உறை ஆகியவை அணிந்து மிகவும் பாதுகாப்புடன் கொண்டு வரப்படுவர்’ என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.







இந்தியர்களை மீட்க சீனா விரைந்தது போயிங்-747 ரக சிறப்பு விமானம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு