15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

கொலை வழக்கைச் சுற்றிய மர்மங்கள்!

ஏராளமான மர்மங்களால் பின்னப்பட்டுக் கிடக்கும் கொலைப் பற்றிய உண்மை இன்று வரை வெளிச்சத்துக்கு வரவில்லை. உண்மையும், பொய்யுமாக மாறி மாறி ஒளிந்து விளையாடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை பல்வேறு கோணங்களில் விவரிக்கிறது ‘The Indrani Mukerjea Story: Buried Truth’ ஆவணத் தொடர் (Docu -series). 4 எபிசோடுகள் அடங்கிய இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் காணக்கிடைக்கிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனக்குழுமத் தலைவர் இந்திராணி முகர்ஜி. இவரது கணவர் பீட்டர் முகர்ஜி. இந்திராணியின் தங்கையாக சொல்லப்பட்ட ஷீனா போரா காணாமல் போகிறார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்க யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், காதலர் ராகுல் முனைப்புக் காட்டுகிறார். திடீரென ஒருநாள் ஷீனா போரா கொல்லப்பட்டதாக கூறி, இந்திராணி முகர்ஜியையும், பீட்டரையும் காவல் துறை கைது செய்கிறது.


இது தொடர்பான விசாரணையில் ஷீனா, இந்திராணியின் தங்கை அல்ல, மகள் என்ற உண்மை வெளிவருகிறது. இப்படியான பல மர்மங்களை உள்ளடக்கிய இந்த வழக்கில், இந்திராணி முகர்ஜிக்கு எதிரான சாட்சியங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறியதால் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். உண்மையில் ஷீனா போராவை இந்திராணி தான் கொன்றாரா என்ற ஒற்றை கேள்விககான பதில் உறுதிப்படுத்தபடாமல் வழக்கு நீதிமன்றத்தில் இன்றும் நிலுவையில் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்ட ‘ஷீனா போரா’ கொலை வழக்கின் பின்னணியை ஆராயும் இந்தத் தொடர், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், இந்திராணியின் மகள் விதி (Vidhie), மகன் மிகைல் (Mikhail) ஆகியோரின் பார்வையிலிருந்து விரிகிறது. இவர்கள் மட்டும் பேசியிருந்தால் வழக்கமான தொடராக முடித்திருக்கலாம். ஆனால், குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜியை, அதுவும் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போதே, பேச வைத்திருப்பதுதான் தொடரை கூடுதல் சுவாரஸ்யமாக்குகிறது.


ஏராளமான தகவல்களை 4 எபிசோடுகளுக்குள் சுருக்கி, சிக்கலான வழக்கை புரிய வைத்திருப்பதும், நிஜ சம்பவங்களின் வீடியோ பதிவுகளும், அதிர்ச்சிகர உண்மைகளை ஷார்ப்பான படத்தொகுப்பின் மூலம் சொல்லியிருப்பது பலம்.“குடும்பத்தில் உள்ளவர்கள் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கிறார்கள்” என்கிறார் பத்திரிகையாளர் ஒருவர்.


“ஷீனா உயிரோடு தான் இருக்கிறார். நான் கொல்லவில்லை” என்கிறார் இந்திராணி. மேலும், ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியே வந்த அவரிடம் எந்த வித குற்ற உணர்ச்சியோ, அச்சமோ, விரக்தியோ இல்லை. மாறாக மிகச் சாதரணமாக இருக்கிறார் என்கிறது தொடர். அதை உறுதிசெய்யும் அவர், ‘நான் தான் கொல்லவில்லையே, எதற்கு அச்சப்பட வேண்டும்’ என்கிறார். புதிரான வழக்கில் எல்லோரும் அவரவர் பக்க நியாயங்களை அடுக்குகிறார்கள்.


தொடக்கத்தில் இந்திராணிக்கு எதிரான தகவல்கள் மூலம் அவரை குற்றவாளியாக கருத வைக்கும் தொடர், பின்னர் அவரின் நேரடி வாக்குமூலத்தின் வாயிலாக வேறொரு கோணத்தை உருவாக்கி, இறுதியில் யார் பக்கம் தவறு என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலம் வழக்கின் சிக்கலான தன்மை புரிகிறது. கிட்டத்தட்ட க்ரைம் த்ரில்லருக்கு இணையான கதைக்களத்தைக் கொண்ட இந்த ஆவணத் தொடர் விடையில்லா பல கேள்விகளுடன் முடிகிறது.


பல்வேறு தரப்பினரின் கருத்துகள் இடம்பெற்றிருந்தாலும், இந்திராணி, ஷீனாவை கொலை செய்ய வேண்டியதற்கான காரணத்தை அழுத்தமாக சொல்லாதது பலவீனம். மேலும், இந்திராணியிடம் வழக்கு தொடர்பான மேலோட்டமாக கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருப்பதாக தோன்றுகிறது. அதேபோல, அவரின் கணவரான பீட்டர் தரப்பு வாதங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.



ஜான் ரட்லேண்ட்டின் கேமரா பிரசவிக்கும் காட்சிகள் உண்மைக்கு நெருக்கமான திரையனுபவத்தையும், ஜோயல் க்ராஸ்டோவின் பின்னணி இசை ஒருவித மர்மத்தையும், தொடர் முழுக்க கடத்திக்கொண்டேயிருக்கிறது. விசித்திரமான கொலை வழக்குகளின் ஆவணத் தொடர்கள் வெளிவந்துக்கொண்டிருக்கும் நிலையில் அயற்சியில்லாமல் நகரும் இந்த தொடர் ஒரே மூச்சில் பார்த்துவிடக் கூடியது




கொலை வழக்கைச் சுற்றிய மர்மங்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு