15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை அடித்தே விரட்டிய பெண்கள்!

இந்தியாவில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை, சற்றும் அஞ்சாது வெறும் கையால் அடித்து விரட்டிய தாய் - மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கைத்துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை, வீட்டில் தனித்திருந்த இரு பெண்கள் போராடி அவர்களை அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் உறுதிபடுத்தியதை அடுத்து, இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அமிதா மஹ்னோத் என்ற பெண்மணி, தனது இளம் வயது மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோருடன் வீட்டில் தனித்திருந்த போது இரு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நுழைகின்றனர். வீட்டின் மற்றொரு அறையில் தாயும் மகளும் இருந்தபோது, கொள்ளையர் இருவரும் கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தப்பிக்க முயல்கின்றனர்.

ஆனால் அமிதா மஹ்னோத் கண்ணில் ஒரு கொள்ளையன் சிக்கியதால் அவனைப் பிடிக்க பாய்கிறார்.  ஹெல்மெட் அணிந்திருந்த அந்த கொள்ளையன் தன் கையில் துப்பாக்கி இருந்ததால், அமிதா பயந்துவிடுவார் என்று நினைத்திருந்தான்.  ஆனால் அமிதா மட்டுமன்றி அவரது மகளும் சேர்ந்துகொண்டு தாக்குதல் தொடுக்க, ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான்.


ஆனால் அதற்கு இடம்கொடாது தாயும் மகளுமாக கொள்ளையன் மீது பாய்ந்து தாக்கியதோடு, ஹெல்மெட்டை அகற்றி அவனது அடையாளத்தையும் அறிந்துகொண்டனர். தாய் மற்றும் மகளிடம் சரமாரியாக அடிவாங்கிய கொள்ளையன் கேட்டை திறந்துகொண்டு தெறித்து ஓடுகிறான். இதனிடையே இன்னொரு கொள்ளையன் வீட்டுக்குள் ஒளிந்திருப்பதாக அமிதாவிடம் ஓடிவந்து பணிப்பெண் தெரிவிக்கிறார்.


உடனே அச்சமின்றி அந்த கொள்ளையனை பிடிக்க வீட்டுக்குள் இருபெண்களும் அடுத்த பாய்ச்சலை மேற்கொள்கின்றனர். வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான வீடியோவில் வீட்டுக்குள் நடந்த அந்த மோதல் காட்சிகள் பதிவாகவில்லை.  அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்து ஆண்கள் உதவிக்கு வர, வீட்டின் உள்ளிருந்து இரண்டாவது கொள்ளையன் கத்தியுடன் பாய்ந்து தப்பிச் சென்றுள்ளான்.


தகவலறிந்து வந்த பொலிஸாரின் விசாரணையில், சிசிடிவியில் பதிவாகி இருந்த சுஷில் குமார், பிரேம் சந்திரா என 2 கொள்ளையர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரும் செகந்திரபாத்தில் தங்கி நிழலான காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமிதா அடிப்படையில் தற்காப்பு கலை பயின்றவர் என்பதால், தனது மைனர் மகளுடன் இணைந்து துணிச்சலுடன் கொள்ளையர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்திருக்கிறார். 

சினிமா காட்சிகளுக்கு சவால் விடும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக, அமிதா மற்றும் அவரது மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.





ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை அடித்தே விரட்டிய பெண்கள்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு