இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதி கூட பெறாத மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கும் நிலையில், தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்ற தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்துள்ளது.
தேர்தல் ஆரம்பத்தில் 400 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்ற முழக்கத்தோடு தேர்தலை எதிர்கொண்டது. நாட்கள் செல்ல, செல்ல 400 என்ற முழக்கம் குறைந்தது. தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் மதங்களை அடிப்படையாக வைத்து நடைபெற்றது. ஒரு கட்டத்தில் ராமர் கோயிலை இடித்துவிடுவார்கள். இஸ்லாமியர்களுக்கு இந்துக்களின் சொத்துக்களை வழங்கி விடுவார்கள் என என அடுத்தடுத்து பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச தொடங்கினார்.
இதனால் பாஜகவிற்கு வாக்குகள் அதிகரிக்கும் என நினைத்திருந்தார். ஆனால் எப்போதும் போல் கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலமே காலை வாரி விட்டது.
இது ஒரு புறமிருக்க தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலத்தில் அதிகப்படியான தொகுதிகள் பாஜகவிற்கு கிடைத்த நிலையில் கேரளாவிலும் ஒரு தொகுதியை பாஜக கைப்பற்றியது.
ஆனால் தமிழகத்தில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாமல் பெரும்பாலான இடங்களில் டெபாசிட் இழந்தது.
வாக்கு சதவிகிதமும் 11 என்ற அளவை தாண்டவில்லை. இதனால் பாஜக தேசிய தலைமை மாநில தலைமை அண்ணாமலை மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்திருந்தால் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றியிருக்க முடியும் என பாஜக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
அதிமுகவுடன் மேற்கொண்ட மோதல் போக்கால் தான் அதிமுகவும் தோல்வி அடைந்து தாமும் தோல்வி அடைந்தவிட்டதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மோதல் போக்குகளை மேற்கொள்ளாமல் மற்ற கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் இனக்கமாக செல்லும் ஒரு தலைவரை நியமிக்கலாமா என ஆலோசனை தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
அந்த வகையில் முதல் ஆளாக வானதி சீனிவாசன், அடுத்ததாக நயினார் நாகேந்திரன், கரு. நாகராஜ். கே.பி.ராமலிங்கம் ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழக பாஜகவில் மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
0 Comments
No Comments Here ..