19,May 2024 (Sun)
  
CH
விளையாட்டு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு

இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவியும், சிரேஷ்ட வீராங்கனையுமான சஷிகலா சிறிவர்தன, இம்மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை பெண்கள் அணி நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதுடன், அதற்குமுன் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட இலங்கை பெண்கள் அணியின் பயிற்சியாளர் சஷிகலாவின் ஓய்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். 

இலங்கை பெண்கள் அணிக்காக அதிகளவு ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஒரேயொரு வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ள சகலதுறை வீராங்கனையான இவர், 98 போட்டிகளில் இலங்கை ஒருநாள் மற்றும் டி20 பெண்கள் அணியின் தலைவியாக செயற்பட்டுள்ளார்.

அத்துடன், 2003 இல் சர்வதேச அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், 2005 இல் நடைபெற்ற பெண்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து 2009, 2013, 2017 உள்ளிட்ட நான்கு உலகக் கிண்ணத் தொடர்களிலும் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும், 2012, 2016 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றடி டி20 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடினார்.

34 வயதான சஷிகலா சிறிவர்தன, இதுவரை 118 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 7 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 2029 ஓட்டங்களைக் குவித்துள்ளதுடன், 77 டி20 போட்டிகளில் விளையாடி 1079 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

சுமார் 17 வருடங்கள் இலங்கை பெண்கள் அணிக்காக விளையாடிய சஷிகலா சிறிவர்தன, வலதுகை துடுப்பாட்ட வீராங்கனையாகவும், சுழல் பந்துவீச்சாளராகவும் செயற்பட்டு பல வெற்றிகளையும் ஈட்டிக் கொடுத்துள்ளார். 

அதுமாத்திரமின்றி, இலங்கை பெண்கள் கிரிக்கெட்டில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீராங்கனையாக வலம் வந்து கொண்டிருக்கின்ற இவர், ஒருநாள் போட்டிகளில் 2000 ஓட்டங்களைக் குவித்து 100 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய முதல் வீராங்கனையாகவும் இடம்பிடித்துள்ளார். 

அத்துடன், 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி இன் பெண்களுக்கான டி20 தரவரிசையில் சகலதுறை வீராங்கனைகளில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட அவர், முன்னதாக 2013 இல் ஐ.சி.சி இன் ஒருநாள் தரப்படுத்தலில் 4 ஆவது இடத்தையும், டி20 தரப்படுத்தலில் 6 ஆவது இடத்தையும் பெற்று அசத்தினார்.





இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி சஷிகலா சிறிவர்தன ஓய்வு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு