நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதி
நடிகை ஐஸ்வர்யா மேனன்
இயக்குனர் ராணா
இசை ஹிப்ஹாப் ஆதி
ஓளிப்பதிவு வாஞ்சிநாதன் முருகேசன்
ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஆதிக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை உள்ளது. அதாவது சோகமானாலோ, பதற்றம் ஏற்பட்டாலோ அவருக்கு தாங்கமுடியாமல் சிரித்துவிடுவார். இந்த சிரிப்பால் அவர் வேலையை இழக்கிறார். அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த சூழலில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார் ஆதி.
இதேபோல் தாதாக்களான ரவி மரியாவும் கே.எஸ். ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கின்றனர். கே.எஸ். ரவிக்குமாரை கொல்ல ரவி மரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். நண்பனை தேடி செல்லும் ஆதி எதிர்பாராத விதமாக கே.எஸ். ரவிக்குமாரிடம் சிக்கி கொள்கிறார். இறுதியில் ஆதி அங்கிருந்து எப்படி தப்பித்தார்? அவரின் காதல் கை கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கெக்க பெக்க எனும் பெயரில் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற குறும்படத்தை முழு நீள படமாக எடுத்துள்ளனர். நாயகன் ஆதி, வழக்கம்போல தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, டான்ஸ் என கமர்ஷியல் ஹீரோவாக அசத்தி இருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார்.
ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி, டைமிங் காமெடிகளின் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆதிக்கும் அவருக்கும் இடையிலான அப்பா, மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதேபோல் வில்லனாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர்.
இந்த கதையை கெக்க பெக்க எனும் குறும்படம் மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் ராணா, இந்த படத்தில் அதனை தவறவிட்டுள்ளார். கதாபாத்திரங்களில் தேர்வில் கவனம் செலுத்தி உள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். காமெடி காட்சிகள் சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படியாக உள்ளது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பிரேக் அப், நான் சிரித்தால் ஆகிய பாடல்களை தவிர மற்றவை மனதில் ஒட்டவில்லை. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.
மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பு குறைவு.
0 Comments
No Comments Here ..