28,Apr 2024 (Sun)
  
CH
விளையாட்டு

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரை சொந்த மண்ணில் நடத்தும் பாகிஸ்தானின் திட்டம் வெற்றி!

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரை முழுமையாக சொந்த மண்ணில் நடத்தும் பாகிஸ்தானின் திட்டம் வெற்றியளித்துள்ள நிலையில், வெளிநாட்டு வீரர்களை உள்ளடக்கிய இத்தொடர் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு, பாகிஸ்தான் மீதான அச்சம் குறைந்துள்ள நிலையில், அதனை முழுமையாக நீக்கும் முயற்சியின் ஒரு கட்டமாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இத்தொடரை சொந்த மண்ணில் நடத்துகின்றது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி வாசிம் கான் கூறுகையில் ”வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் வருவது எங்களுக்கு மிகப்பெரிய சலுகை. சர்வதேச போட்டிக்கான மிகப்பெரிய முன்னேற்றம்.

ஏனென்றால், வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் மண்ணில் நான்கு வாரங்கள் முதல் ஐந்து வாரங்கள் வரை தங்கியிருந்து பாதுகாப்பான முறையில் விளையாடலாம் என நம்புகிறார்கள்” என கூறினார்.

ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், நாளை முதல் மார்ச் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இத்தொடரின் 34 போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள நான்கு சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் 9 போட்டிகளும், லாகூர் கடாஃபி மைதானத்தில் 14 போட்டிகளும், முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் மூன்று போட்டிகளும், ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் 8 போட்டிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டைச் சேர்ந்த 36 நட்சத்திர வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 22 நாடுகளில் இருந்து 425 வீரர்கள் நடப்பு தொடரில் விளையாட தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

நாளை ஆரம்பமாகும் இத்தொடரில் முதல் போட்டியில், இஸ்லாமாபாத் யுனைடெட் அணியும், குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணியும் கராச்சி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

நான்கு வருடத்திற்கு முன் இந்தத் தொடர் அறிமுகமான போது வெளிநாட்டு வீரர்கள் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தான் மண்ணில் விளையாட தயங்கினர்.

இதனால், இதுவரை காலமும் பாதுகாப்பு அச்சுறுத்தலை காரணம் காட்டி, பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர், ஐக்கிய அரபு நடத்தப்பட்டுவந்தது.

தற்போது, இலங்கை, பங்களாதேஷ் போன்ற அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியுள்ளதால் பாகிஸ்தான் மீதான அச்சம் தணிந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடர் முழுமையாக சொந்த மண்ணில் நடத்தப்படுகின்றது.

கடந்த 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் ஆறு பாகிஸ்தான் பொலிஸார் மற்றும் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

இதனால், பாகிஸ்தானிற்கு சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டின. ஆனாலும் கடும் முயற்சிகளை மேற்கொண்ட பாகிஸ்தான், 2015ஆம் ஆண்டு சிம்பாப்வேயை பாகிஸ்தான் வரவழைத்து கிரிக்கெட் தொடரிலும் விளையாடி, வீரர்களுக்கு பணப்பரிசினையும் பரிசளித்தது.

இதன்பிறகு, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இரண்டாம் நிலை இலங்கை அணி பாகிஸ்தானில் ஒரேயொரு ரி-20 போட்டியில் விளையாடியது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.சி.சி. உலக பதினொருவர் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகளும் பாகிஸ்தானில் குறுகிய கால ரி-20 சர்வதேச தொடர்களில் விளையாடின.

இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தீவிர முயற்சியால் கடந்த ஆண்டின் பாகிஸ்தானுக்கே உரித்தான பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் பிற்பகுதி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்றது.

இவ்வாறான கடுமையான முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்ட போதும், பாகிஸ்தான் மீது நம்பிக்கையில்லாத சர்வதேச அணிகள், அங்கு சென்று விளையாட, தொடர்ந்தும் தயக்கம் காட்டின.

ஆனால், உலகளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அண்மையில் இலங்கை அணி, முதலில் பாகிஸ்தான் சென்று விளையாடியது. எனினும் இத்தொடரில், இலங்கை அணியின் பல முன்னணி வீரர்கள் பங்கேற்கவில்லை.

இதன்பிறகு ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் ஓர் அங்கமாக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முன்னணி வீரர்களுடன் இலங்கை அணி பங்கேற்றது.

இதனால், எந்த அணி பாகிஸ்தான் சென்றபோது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினோர்களோ, அதே அணி தற்போது துணிச்சலுடன் பாகிஸ்தான் சென்றுள்ளதனை, பலரும் பாராட்டினர்.

இலங்கை அணியின் வருகையால், பாகிஸ்தான் மீதான அச்சம் துடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச அணிகள் கருதின. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது.

இதன் அடிப்படையிலேயே தற்போது வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கும் பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரை முழுமையாக சொந்த மண்ணில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.





பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரை சொந்த மண்ணில் நடத்தும் பாகிஸ்தானின் திட்டம் வெற்றி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு