ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்றிருந்த விவாதம், முதல்வர் வேட்பாளர் யார் என்ற அளவிற்கு சென்றுள்ளது
“2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது உறுதி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம்” என்று கூறிய ரஜினி தற்போது அதற்கான பணிகளில் வேகம் காட்டுவதால் எந்த நேரமும் கட்சி அறிவிப்பு விவரம் வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
“ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்கி, ஆகஸ்டில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை நடத்துவார். பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும்” என தமிழருவி மணியன் சமீபத்தில் அறிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் பேசிய தமிழருவி மணியன், “ரஜினிகாந்த் ஒரு விஷயத்தைக் கூறும்முன் ஓராயிரம் முறை யோசிப்பார். அப்படி கூறிவிட்டால் பின்வாங்கவே மாட்டார்” எனக் கூறினார்.
“ரஜினிகாந்த் தனித்துப் போட்டி என்றார், நீங்களோ பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றீர்கள். ரஜினிகாந்த் பேசிவிட்டால் அதிலிருந்து பின்வாங்க மாட்டார் என்றும் இப்போது நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியென்றால் நீங்கள் சொல்வது பொய்யா, அல்லது ரஜினிகாந்த் தனித்துப் போட்டி என்பதில் பின்வாங்குகிறாரா” என தமிழருவி மணியனை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று ரஜினிகாந்த் பேசியதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று கூறியவர் இன்று கூட்டணி பற்றி பேசுகிறாரே, தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி தான் கூறியதிலிருந்து பின்வாங்குகிறாரே என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
விமர்சனங்கள் ஒருபக்கம் போய்கொண்டிருந்தாலும் ரஜினிகாந்த் தொடர்ந்து அரசியல் தலைவர்களை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசிவருகிறார். நேற்று இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினார். சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த செ.கு.தமிழரசன், “ரஜினிகாந்த் மக்கள் பணியாற்ற தயாரக இருக்கிறார்” என்று கூறினார்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான திருநாவுக்கரசர் ரஜினிகாந்தை தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசியுள்ளார். திருநாவுக்கரசர் ரஜினிகாந்தின் நண்பர் என்றாலும் இன்றைய சூழலில் ஒவ்வொரு சந்திப்புமே அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் நிலையில் இந்த சந்திப்பின் பின்னணி குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன.
0 Comments
No Comments Here ..