10,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் முதல் நேரடி அரசியல்:  

1995ம் ஆண்டு வெளியான பாட்ஷா திரைப்பட விழாவில் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகிவிட்டதாக கருத்து தெரிவித்தார். அதனால் பாட்ஷா திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அபோதைய அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் 1996ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனர் ஜி.கே. மூப்பனார் ஆகியோருடன் கூட்டணி சேர்ந்து அ.தி.மு.க.விற்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்தார். அந்த தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரித்த கூட்டணியே அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரது ரசிகர்கள் ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு வரவேண்டும் என்றும், தமிழகத்தை ஆள வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தொடர் கோரிக்கைகளை வைத்துவருகின்றனர். ரஜினிகாந்தும் அதற்கு ஏற்றார் போல அவர் நடிக்கும் திரைப்படங்களில் மட்டும் அவ்வப்போது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக தெரிவித்து வந்தார். 

இந்நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு தமிழக அரசியலில் தலைமையிடத்திற்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கடந்த 2017ம் ஆண்டு கூறினார். மேலும் போர் வரும் போது வருவேன் என்றும் 2017ம் ஆண்டு ரசிகர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ‘நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்றும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் ஆன்மீக அரசியலில் ஈடுபட போவதாகவும், கொள்கை குறித்து கேட்கும் தலை சுற்றிவிட்டதாகவும் கூறினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லையா என்ற கேள்வி எழுந்தபோது எனது இலக்கு சட்டமன்ற தேர்தலே என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

மேலும் அவ்வப்போது செய்தியாளர்களையும் சந்தித்துவந்தார். அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளில் ரஜினி அவருடைய கருத்துக்களையும் தெரிவித்துவருகிறார். இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் எனவும், எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும் எனவும் தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த கருத்துக்கள் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்தின் இந்த கருத்துக்களை அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சனம் செய்தனர்.  

மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., சி.ஏ.ஏ.விற்கு ஆதரவு போன்ற தேசிய அரசியலிலும் தனது கருத்துக்களை நடிகர் ரஜினிகாந்த் கூறிவந்தார். இந்நிலையில் ஜனவரி மாதம் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திராவிடர் கழகத் தலைவராக இருந்த பெரியார், ஈரோட்டில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின்போது, ராமரை செருப்பால் அடித்ததாக கருத்து கூறினார். இந்த கருத்து தவறானது என திராவிட இயக்க தலைவர்கள் ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவித்தனர். 

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு:

இந்நிலையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நடிகர் ரஜினிகாந்த், கட்சியை எப்போது தொடங்குவது என்பது குறித்தும், கட்சி பெயர், கொடி போன்றவற்றை முடிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாமா அல்லது தனித்து களம் காணலாமா என்பது பற்றியும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்ததாக தகவல் வெளியானது.  

இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஒரு விஷயத்தில் மட்டும் ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறினார். மேலும் தன்னை தவிர வேறு யாரையாவது முதலமைச்சர் வேட்பாளாராக அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பியதாகவும் தகவல்கள் வந்தன. இதனால் ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை என்ற கருத்தும் அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டது. 

இந்நிலையில், மீண்டும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன், இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறிவித்தார்.

இன்று தனியார் நட்சத்திர ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் இருக்க வேண்டும் என கூறினார். ஆட்சியில் இருக்கும் தலைமையை, கட்சி தலைமை வழி நடத்தும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணமோ, சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமோ கிடையாது எனக்கூறினார். 

மேலும் அசுர பலம் வாய்ந்த அதிமுக மற்றும் திமுக என்ற இரண்டு பெரும் ஜாம்பவான்களை எதிர்த்து போராட வேண்டியது உள்ளது எனவும், கருணாநிதியும், ஜெயலலிதாவும் மிகப்பெரிய ஆளுமைகள் என்றும் அவர்கள் இல்லாதது தற்போது வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் 2021ம் ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை நிகழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் அரசியல் மாற்றம், மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி மக்களிடம் தெரிந்தால் தான், நான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். அரசியல் மாற்றமும், ஆட்சி மாற்றமும் இப்பொழுது ஏற்படவில்லை என்றால் எப்போதும் நடக்காது என்று கூறினார். 




சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு