கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரம் குறித்து காணலாம்.
* இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பீகாரில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் சிவான் பகுதியை சேர்ந்தவர். இவர் சமீபத்தில் துபாயில் இருந்து திரும்பியுள்ளார். மற்றொருவர் நாளந்தாவை சேர்ந்தவர். இவரும் வெளிநாட்டில் இருந்து திரும்பியதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அம்மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது.
* பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாள்தோறும் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் “ராமாயணா” தொடர் மீண்டும் ஒளிபரப்ப மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. காலை 9-10 ஒரு எபிசோடும், இரவு 9-10 மற்றொரு எபிசோடும் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
* மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் 21 நாட்கள் லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
புனேவில் உள்ள பிம்ரி-சிஞ்ச்வாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர்.
* ஜம்மு காஷ்மீரில் ஏழைகளுக்கு இன்று முதல் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து மருந்து கடைகளும் திறந்தே இருக்கும். காலை 8 மணி முதல் 11 மணி வரை பால் விநியோகம் செய்யபப்டும். மளிகை கடைகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
* மும்பையில் உள்ள மும்பாதேவி கோயிலில் சைத்ர நவராத்திரி 2020ஐ ஒட்டி ஆராதனை நடைபெற்றது. அதில் சிலர் மட்டும் கலந்து கொண்டு சமூக விலகல் என்ற இடைவெளியை கடைபிடித்து வழிபாடு நடத்தினர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 5ஆம் ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள், ஓய்வு பெற்ற மருத்துவர்களின் உதவியை அரசு நாடியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
* டெல்லி பத்பர்கஞ்ச் பகுதியில் உள்ள சஃபல் ஸ்டோரில் பழங்கள், காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அணிவகுத்து நிற்பதைக் காணலாம்.
இன்று காலை 10 மணிக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீநகரில் பயணம் மேற்கொண்டு வெளியில் சொல்லாத 180 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றனர்.
* கோவிட்-19 அச்சம் காரணமாக மசூதிகளில் வந்து தொழுகை நடத்துவதற்கு பதில் வீட்டிலேயே தொழுகை நடத்த அனைத்திந்திய முஸ்லீம் சட்ட வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் 35 வயதான நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இவருக்கு எந்தவித பயணத் தொடர்பும் இல்லாத சூழலில், காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
* இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு700ஐ தாண்டியுள்ளது.
0 Comments
No Comments Here ..