08,May 2024 (Wed)
  
CH
சினிமா

நாயே பேயே திரை விமர்சனம் ....

தமிழ் சினிமாவில் பேய்க் கதைகளின் மீதான மோகம் ரசிகர்களுக்குக் குறைந்ததோ இல்லையோ ஆனால், சினிமா எடுப்பவர்களுக்குக் குறையவில்லை.


படத்தின் தலைப்பே இது ஒரு பேய்ப் படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. மற்ற பேய்ப் படங்களில் இருந்து இந்தப் படம் எப்படி வேறுபட்டிருக்கிறது என்பதுதான் படத்தின் வித்தியாசமே. இது பேய்ப் படம் மட்டுமல்ல, பேய்த்தனமான காதல் படம். அது என்ன பேய்த்தனமான காதல் என்பது படம் பார்ப்பவர்களுக்குத்தான் புரியும்.


காதலுக்காக எதையெதையோ தியாகம் செய்வார்கள், இந்தப் படத்தில் எதைத் தியாகம் செய்கிறார்கள் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ், என்பதால் அதைச் சொல்ல முடியாது.


தினேஷ், அவரது நண்பர்கள் மூவருடன் இணைந்து சிறு சிறு திருட்டுக்களைச் செய்து வருபவர். ஒரு கட்டத்தில் நாய்களைத் திருடி சம்பாதிக்கிறார்கள். ஒரு வீட்டு நாயைத் திருடிய போது, அந்த நாயை யாராவது கண்டுபிடித்துக் கொடுத்தால் ஐந்து லட்ச ரூபாய் பரிசு என அறிவிப்பு வருகிறது. எனவே, அந்த நாயைத் திருப்பிக் கொடுத்து ஐந்து லட்ச ரூபாயை வாங்கி வருகிறார்கள். அந்த வீட்டில் நாய்க்கே ஐந்து லட்ச ரூபாய் தருகிறார்கள் என்றால் அந்த வீட்டுப் பெண்ணைக் கடத்தினால் நிறைய வாங்கலாமே என நினைத்து அந்த வீட்டில் உள்ள படத்தின் நாயகி ஐஸ்வர்யாவைக் கடத்தி வருகிறார்கள். அவர்கள் கடத்தி வந்தது ஐஸ்வர்யா அல்ல, ஐஸ்வர்யாவின் பேய் என்பது வீட்டிற்கு வந்தபின்தான் தெரிகிறது. பேயாக இருக்கும் ஐஸ்வர்யாவும், தினேஷும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இது தினேஷின் நண்பர்களுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


பேயுடன் காதல் என வித்தியாசமான ஒரு வரிக் கதையை யோசித்திருக்கிறார்கள். ஆனால், அதை வைத்து திரைக்கதையில் ஒரு சூப்பரான காமெடி கொண்டாட்டத்தையே நடத்தி இருக்கலாம். கடைசி அரை மணி நேரத்தில் வைத்துள்ள விறுவிறுப்பையும், பரபரப்பையும் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதையும் படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே கொண்டு வந்திருந்தால் ஒரு முழு நகைச்சுவைப் படத்தைப் பார்த்த திருப்தி இருந்திருக்கும். இருந்தாலும் கிளைமாக்சில் காமெடியை மிஞ்சிய காதலை வைத்து முடித்திருக்கிறார்கள்.


படத்தின் நாயகனாக டான்ஸ் மாஸ்டர் தினேஷ். இதற்கு முன்பு ஒரு குப்பைக் கதை என்ற படத்தில் கதையின் நாயகனாக யதார்த்தமாக நடித்து நல்ல பெயரை வாங்கியிருந்தார். இந்தப் படத்தில் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாய் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனாலும், முகத்தில் எப்போதும் ஒரு சோகம் பரவி இருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.


பேய்க் காதலியாக ஐஸ்வர்யா. தன்னுடைய நடிப்பை விட கிளாமரை அதிகம் நம்பியிருக்கிறார். தனியாளாக படத்தின் நகைச்சுவையைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார் ஆடுகளம் முருகதாஸ். இவருடன் நண்பர்களாக இருக்கும் இன்னும் இருவரும் அவர்களது பங்கை கவனிக்க வைக்கிறார்கள்.


படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே ஒரு வீட்டிற்குள்தான் அதிகம் நடக்கிறது. அந்த சிறிய வீட்டிலேயே படம் நகரும் உணர்வை மாற்றியிருக்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர். ரகுநந்தன் இசையில் ஒரு பாடல் மட்டும் கேட்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே ரகம்தான்.


ஆரம்பம் முதல் மெதுவாக நகரும் கதை, கடைசி அரை மணி நேரத்தில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. சிறிய சிறிய மாற்றங்கள் சிலவற்றைச் செய்திருந்தால் படம் இன்னும் அதிகம் பேசப்பட்டிருக்கும்.


பார்த்த காதல், பார்க்காத காதல், சந்திக்காத காதல், நிறைவேறாத காதல் என வந்த பல காதல் படங்களின் வரிசையில் இது பேய்க் காதல்.





நாயே பேயே திரை விமர்சனம் ....

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு