இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் அலையில் மரபணு திரிபு ஏற்பட்ட கொரோனா கிருமி நுரையீரலின் செயல்பாட்டை சிதைத்து சுவாசப்பிரச்சினையை உருவாக்குகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் மட்டும் இன்று 285 பேர் இறந்துள்ளனர். தமிழ் நாட்டில் இன்று 77 பேர் உயிரிழந்துள்ள நிலையில் நாடு முழுவதும் 2776 பேர் ஒரே நாளில் மடிந்துள்ளனர்.
உலக சுகாதார நிறுவனம் அவரச கால அடிப்படையில் இந்தியாவுக்கு 2500 சுகாதாரப் பணியாளர்களை அனுப்பியுள்ளது. இதுவொருபக்கம் இருக்க இந்தியாவில் கர்நாடகா ஆந்திரா டெல்லி ஆகிய மாநிலங்கள் 15 நாள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றன. இம்முறையும் வேலையிழப்பு, உணவுத் தட்டுபாடு ஆகியவற்றை சந்தித்து வருகின்றனர். ஏழ்மை, வறுமைக்கு நடுவே கொரோனாவை எதிர்கொள்ளும் வறிய இந்தியர்களுக்கு உதவும் நோக்குடன் நடிகர் அக்ஷய் குமார், 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். தற்போது வழங்கியிருக்கும் இந்த 1 கோடி ரூபாயை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதை குறிப்பிட்டு ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். இதுதவிர ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த திரைப்பட தொழிலாளர்களுக்கும் அவர் பல்வேறு உதவிகளைச் செய்தவர் அக்ஷய்குமார்.
0 Comments
No Comments Here ..