15,Jun 2026 (Mon)
  
CH
சினிமா

மனைவியின் பிரிவு மது வாழ்க்கை- விஷ்ணுவிஷால்

நடிகர் விஷ்ணுவிஷால், தான் மதுவுக்கு அடிமையாகி எப்படி மீண்டேன் என்று தெரிவித்துள்ளார்.


நடிகர் விஷ்ணு விஷால், இப்போது ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்துவருகிறார். தான் காதல் மனைவியை பிரிந்தது, மதுவுக்கு அடிமையானது, அதில் இருந்து மீண்டது பற்றி 2 பக்க கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என் வாழ்க்கையும் மற்றவர்களைப் போல ஏற்ற இறக்கங்களுடன் தான் இருந்தது. ஆனால், கடந்த இரண்டு வருடங்கள் எனக்கு மிகவும் கடுமையானது. அவை கருப்பு நாட்களாக அமைந்துவிட்டன.


11 ஆண்டு சேர்ந்து வாழ்ந்த என் மனைவியை 2017 ஆம் ஆண்டு பிரிந்தேன். இருவரும் வேறுவேறு வீடுகளில் வசித்தோம் என்பதுமட்டுமல்ல, இது என் மகனிடம் இருந்து விலக வைத்தது. என் வாழ்க்கை பேரழிவை சந்தித்தது. என் வாழ்வு இப்படியாகும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை.


மதுவுக்கு அடிமையானேன். ஒவ்வொரு இரவும் போதைதான். மன அழுத்தம், தூக்கமில்லாமல் உடலை பாதித்தது. அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். பிறகு வேலைப் பளு அதிகரித்தது. எனது தயாரிப்பு நிறுவனமும் பிரச்சினைகளைச் சந்தித்தது. பைனான்ஸ் பிரச்சினையால், நான் தயாரித்த படத்தை வெறும் 21 நாளிலேயே நிறுத்தினேன். பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் காடன் படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம் வேறு.


சூழ்நிலைக் கைதியானேன். எல்லாம் எனக்கு எதிராகச் சென்றதால் 8 சிறந்த வாய்ப்புகளை இழந்தேன். விவாகரத்து, மகன் பிரிவு, உடல் பிரச்னை, குடிப்பழக்கம் என சிக்கித் தவித்தேன். பின்னர் மன அழுத்தத்துக்குச் சிகிச்சை பெற்றேன். உடலை வலுப்படுத்தப் பயிற்சி மேற்கொண்டேன்.


உணவுப் பழக்கவழக்கங்களை ஆரோக்கியமாக வடிவமைத்தேன். மதுவை குறைத்துக் கொண்டேன். நெருங்கிய நண்பர்களை மட்டும் அருகில் வைத்து எனது வாழ்க்கையிலும் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறேன்.


என்னைப் போன்றே பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கலாம். அவர்களுக்கு சொல்ல விரும்புவது, பாசிட்டிவாக சிந்தியுங்கள். மீண்டு வாருங்கள். உங்களை நீங்களே சரிசெய்யுங்கள். உடல் நலன் எப்போதுமே மன நலத்தை நல்வழிபடுத்தும். இதை நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்துள்ளேன். அப்படி இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்.


கடந்த 2 வருடத்தில் அதிகம் கற்றுக் கொண்டேன். உங்கள் சோதனைக் காலங்களில் பலர் பேர் உங்களை உங்களைக் கீழே தள்ளுவார்கள். என்ன நடந்தாலும் உங்கள் மனசாட்சிக்கும் குடும்பத்துக்கும் மட்டும் பதில் சொன்னால் போதும். இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அவருக்கு ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.




மனைவியின் பிரிவு மது வாழ்க்கை- விஷ்ணுவிஷால்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு