02,May 2024 (Thu)
  
CH
சினிமா

தர்பார் –திரைபார்வை

நடிகர் – ரஜினிகாந்த்

நடிகை – நயன்தாரா

இயக்குனர் – ஏ.ஆர்.முருகதாஸ்

இசை – அனிருத்

ஓளிப்பதிவு – சந்தோஷ் சிவன்


மும்பையில் காவல் நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, அங்கு போலீஸ் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்துவிடுகிறது. இதனால் அங்கு பணிபுரியும் காவலர்களும் வேலையை விட்டு செல்லும் முனைப்பிலேயே இருக்கின்றனர். இந்த சூழலில், டெல்லியில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் ரஜினி மூன்று கண்டிஷன்களுடன் மும்பை போலீஸ் கமிஷனராக பதவியேற்கிறார். பதவியேற்றதும், போதை மருந்து கும்பலால் கடத்தப்பட்ட ஒரு அரசியல் வாதியின் மகளை காப்பாற்றுகிறார்.

இதேபோல் போதை மருந்து கடத்தல் கும்பலிடம் சிக்கியிருக்கும் ஏராளமான இளம் பெண்களையும் காப்பாற்றி, மும்பை நகரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி. இந்த போதை மருந்து கடத்தல் கும்பலின் பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க தீவிரம் காட்டும் ரஜினி, ஒரு தொழிலதிபரின் மகனுக்கு இதில் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்து அவனை கைது செய்துவிடுகிறார். அந்த தொழிலதிபர், தனக்கு இருக்கும் அதிகார பலத்தை பயன்படுத்தி தனது மகனை வெளியே கொண்டுவர முயற்சிகளை மேற்கொள்கிறார்.

இதற்கெல்லாம் அசராத ரஜினி தன் சாதுர்யத்தால் அந்த தொழிலதிபரின் மகனை கொல்கிறார். இறந்தது தொழிலதிபரின் மகன் மட்டுமல்ல, உலகளவில் போதை மருந்து கடத்தல் செய்து வரும் தாதா சுனில் ஷெட்டியின் மகன் என பின்னர் தெரிய வருகிறது. இதையடுத்து ரஜினி சுனில் ஷெட்டியின் மகனை எதற்காக கொன்றார்? தனது மகனை கொன்ற ரஜினியை வில்லன் சுனில் ஷெட்டி என்ன செய்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரஜினி, ரஜினி தான், என சொல்லும் அளவுக்கு மொத்த படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். ஆக்‌ஷன், அப்பா-மகள் சென்டிமெண்ட், நயன்தாராவுடன் காதல், யோகிபாபுவுடன் காமெடி என அனைத்து காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். அதிரடி போலீஸ் அதிகாரியாக வந்து தனது மிடுக்கான நடிப்பால் அசர வைக்கிறார். காதல், காமெடி, ஸ்டைல், சுறுசுறுப்பு, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என 70 வயதிலும் 6 பந்துகளில் 6 சிக்சர் அடிக்க முடியும் என நிரூபித்து காட்டி நாட் அவுட் பேட்ஸ்மேனாக நிற்கிறார் ரஜினி.

நாயகி நயன்தாரா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். ரஜினியின் மகளாக வரும், நிவேதா தாமஸ் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கும் யோகி பாபு, சும்மா தெறிக்க விட்டுள்ளார், முதல் பாதியில் பல இடங்களில் வந்து செல்கிறார். வரும் போதெல்லாம் நம்மை சிரிக்க வைக்கிறார்.

வில்லன் சுனில்ஷெட்டி, தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டாம் பாதியில் அறிமுகம் ஆனாலும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஒவ்வொரு காட்சியையும் ரஜினி ரசிகர்களுக்காக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். முதல் பாதியில் காமெடி, ஆக்‌ஷன், இரண்டாம் பாதியின் சென்டிமெண்ட் ஆகியவை ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

படத்திற்கு மிகப்பெரிய பலம் அனிருத்தின் பின்னணி இசை, ஒவ்வொரு பிஜிஎம்மும் தெறிக்க விட்டுள்ளார். குறிப்பாக ரஜினியின் என்ட்ரி செம மாஸ். சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. ரஜினியை பயங்கர ஸ்டைலிஷாக காட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் ‘தர்பார்’ பொங்கல் விருந்து.





தர்பார் –திரைபார்வை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு