19,Apr 2024 (Fri)
  
CH
சினிமா

பட்டாஸ் –திரைபார்வை

நடிகர் – தனுஷ்

நடிகை – சினேகா

இயக்குனர் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்

இசை – விவேக், மெர்வின்

ஓளிப்பதிவு – ஓம் பிரகாஷ்



குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.

கிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.

இதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார்.

இறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். முதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனகெட்டிருக்கிறார்.

சினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் சண்டைக் காட்சியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நவீன் சந்திரா.

அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.

மொத்தத்தில் ‘பட்டாஸ்’ சிறப்பான வெடி. ரேட்டிங் 3/5.





பட்டாஸ் –திரைபார்வை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு