மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக உள்ளது. இதற்காக ரூ.12 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொது வாழ்வை சித்தரிக்கும் அருங்காட்சியகம், நூலகம், திருமண மண்டபங்கள் ஆகியவையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவை சிறப்பாக நடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பே திருவாரூர் சென்று விட்டார்.
காலை 10 மணிக்கு திறப்பு விழா நிகழ்ச்சி மங்கள இசையுடன் கோலாகலமாக தொடங்கியது. முதலில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
இதில் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசித்து சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இதன் பிறகு சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் வந்து பார்த்து ரசித்தார். அவருடன் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலைமைக் கழக நிர்வாகிகள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் அமர்ந்து பார்வையிட்டனர்.
காலை நிகழ்ச்சிகள் முடிந்ததும் உணவு இடைவேளைக்கு பிறகு கலைஞர் கோட்டம் திறப்பு விழா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் திருவாரூர் வந்துள்ளனர். விழா நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட்டு உள்ளது.
0 Comments
No Comments Here ..