நேற்றைய சுதந்திர தின வைபவத்தில் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில், இந்தியா கண்டனம் தெரிவிக்கவேண்டு மெனக் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநில சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் தலைவருமான, மு.க.ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை நேற்றைய தினம் முன் வைத்துள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தில் வழக்கமாக இசைக்கப்பட்டு வந்த முறையின்படி, தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு, தாம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்றையதினம் வெளியிட்ட அறிக்கையூடாகவே இந்தக் கருத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தேசிய கீதத்தின் தமிழ் வடிவம் தொடர்பான விவகாரத்தில், இந்திய மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது தமக்கு வேதனையளிப்பதாக மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ் மொழி தொடர்பான உணர்வு பூர்வமான இந்த விவகாரம் தொடர்பில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தலையிடுமாறு அவர் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாமை தொடர்பில், இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவரை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்குமாறு, இந்திய மத்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு உத்தரவிட வேண்டுமென, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மு.க.ஸ்டாலின்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..