நடிகர் கமல் ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 1997ல் துவங்கப்பட்ட அந்த படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நின்றுவிட்டது. அந்த படத்தை துவங்க கமல் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தார்.
தற்போது கமல் அரசியலுக்கு வந்து அதில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் மருதநாயகம் படம் உருவாகுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
இன்று விஜய் சேதுபதி உடன் இன்ஸ்டாகிராம் லைவ்வில் பேசினார் கமல். அதில் சினிமா வாழ்க்கை, நண்பர்கள், சொந்த வாழ்க்கை, அரசியல், கொரோனா லாக்டவுன் என பல்வேறு விஷயங்கள் பற்றி தனது கருத்தை கூறினார்.
அதனை தொடர்ந்து அவரிடம் மருதநாயகம் படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் பணம் இருந்தால் அந்த படத்தை எடுத்துவிடலாம் என கூறியுள்ளார்.
மேலும் அந்த படத்தின் கதையை தான் எழுதும் போது மருதநாயகம் 40வயதில் இருப்பது போல எழுதியுள்ளேன். தற்போது நான் அதில் நடிக்கவேண்டும் என்றால் மருதநாயகம் கதையை மாற்றவேண்டும். அல்லது வேறு ஒருவரை நடிக்க வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தற்போது கமல் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. அதில் 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு கமல் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் உரசல் ஏற்பட்டதால் ஷூட்டிங் துவங்கவே இல்லை. தற்போது கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் ஷூட்டிங் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
லாக்டவுன் முடிந்தபிறகு ஷூட்டிங் துவங்குமா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
0 Comments
No Comments Here ..